ப.சிதம்பரத்தை அடுத்து மேலும் ஒரு காங்கிரஸ் மூத்த தலைவர் கைது
காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அவர்கள் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் வலிமையான காங்கிரஸ் தலைவராக திகழ்ந்து வரும் கே சிவக்குமார் என்பவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 4 நாள்கள் விசாரணைக்கு பின்னர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த அமைச்சராக இருந்த டிகே சிவக்குமார். மீது சமீபத்தில் பண மோசடி குறித்த புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறையினர்களிடம் ஆஜரானார்.
கடந்த நான்கு நாள்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் விசாரணையின் முடிவில் டிகே சிவக்குமாரை இன்று இரவு அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கைதுக்கு பின் டிகே சிவகுமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். ப சிதம்பரத்தை அடுத்து மேலும் ஒரு காங்கிரஸ் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.