டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்.! வங்கி ஊழியர் கைது..!
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மெட்ரோ ரயில் நிலையங்களில் கொலை மிரட்டல் விடுக்கும் வாசகங்களை எழுதியாக வங்கி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்த நிலையில் டெல்லியின் ராஜீவ் சவுக் மற்றும் படேல் நகர் மெட்ரோ நிலையங்களில் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பிரதமர் அலுவலகம்தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
இந்த நிலையில் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாசகங்கள் எழுதியதாக அங்கித் கோயல் என்பவரை டெல்லி போலீஸார் இன்று கைது செயதுள்ளனர்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் அங்கித் கோயல், வாசகம் எழுதும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அங்கித் கோயல் உயர்கல்வி கற்றவர் என்றும் வங்கியில் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.