அரவிந்த் கெஜ்ரிவால் பதவி தப்பியது..! மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!!
டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இருப்பினும் தேர்தல் சமயம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது பிணையில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.