1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 12 மே 2024 (11:16 IST)

பாஜகவின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம்.! ஆம் ஆத்மியை அழிக்க முடியாது.! கெஜ்ரிவால் ஆவேசம்..!!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம் என்றும் எல்லா கட்சிகளையும் அழித்துவிட பாஜக நினைக்கிறது, ஆனால் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முடியாது என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
 
இந்நிலையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,  தனக்கு முதல்வர் பதவி முக்கியமில்லை என்றார். பொய் வழக்கில் தன்னை ராஜினாமா செய்ய சதி செய்யப்பட்டதால் நான் முதல்வர் பதவியில் இருந்து விலகவில்லை என கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். ஊழலுக்கு எதிராகப் போராடுவதைப் பற்றி பிரதமர் கற்றுக்கொள்ள விரும்பினால், அவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

எங்களை சிறைக்கு அனுப்பிவிட்டு, நீங்கள் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்ட கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம் என்றும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

 
எல்லா கட்சிகளையும் அழித்துவிட பாஜக நினைக்கிறது, ஆனால் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முடியாது என்பதற்கு இங்கு திரண்டுள்ள தொண்டர்களே சாட்சி என்று அவர் கூறினார். ஆம்ஆத்மி கட்சியை வீழ்த்த முடியாமல் 4 தலைவர்களை பிரதமர் மோடி சிறையில் அடைத்தார் என்றும் கடந்த 75 ஆண்டுகளில் ஆம்ஆத்மி போல் எந்த கட்சிக்கும் தொல்லை  கொடுக்கப்பட்டது இல்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.