கிரெடிட் கார்டு பில் செலுத்த கூடுதல் அவகாசம்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!
கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, கிரெடிட் கார்டு பில் தொகையை திருப்பி செலுத்த, நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பிறகு 3 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, கடைசி தேதி முடிந்து ஒரே ஒரு நாள் தாமதமானாலும், வங்கிகள் அபராத கட்டணங்களை வசூலித்து வருகின்றன. ஆனால் புதிய விதியின்படி, கடைசி தேதி முடிந்து 3 நாட்கள் கடந்த பிறகே ஒரு கார்டு கணக்கு அபராதம் விதிக்கப்படக்கூடிய நிலுவையில் உள்ள கணக்காக வங்கிகள் கருத வேண்டும்.
இந்த 3 நாட்களுக்குள் நிலுவை தொகையை செலுத்தினால், கூடுதல் அபராத கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்பதுடன், வாடிக்கையாளரின் கடன் தகுதி பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராத கட்டணத்தை கணக்கிடும் முறையிலும் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்த நிலுவைத் தொகையின் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி கடைசி தேதிக்கு முன்னதாக வாடிக்கையாளர் ஒரு பகுதியை செலுத்தியிருந்தால், மீதமுள்ள நிலுவைத் தொகைக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இந்த 3 நாள் அவகாசம் என்பது அபராதம் மற்றும் கடன் தகுதி பாதிப்பில் இருந்து மட்டுமே காக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதிகள் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
Edited by Siva
