பள்ளிகள் திறந்த சில நாட்களில் 27 மாணவர்களுக்கு கொரோனா: ஆந்திராவில் பரபரப்பு
பள்ளிகள் திறந்த சில நாட்களில் 27 மாணவர்களுக்கு கொரோனா
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. இருப்பினும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து பெற்றோர் அனுமதியுடன் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பெற்றோர் அனுமதியுடன் இரண்டு பள்ளிகளில் நடந்த முறைசாரா வகுப்புகளில் பங்கேற்ற ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதுவரை 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் இதனை அடுத்து மற்ற மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் பள்ளிகள் திறந்த ஒரு சில நாட்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றே பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன