மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்.! 6 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்க.! மருத்துவ நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு.!!
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உத்தரப் பிரதேசம், அசாம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மருத்துவர்களும் அவ்வப்போது போராட்டம், பணி புறக்கணிப்பு என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு மருத்துவ நிறுவனத் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.