1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2023 (18:49 IST)

கே.சி.ஆரை டார்கெட் செய்து அடிக்கும் காங்., பாஜக! – தெலுங்கானாவில் தாக்கு பிடிக்குமா பிஆர்எஸ்?

தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சியான சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.



தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தெலுங்கானாவில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருபவர் சந்திரசேகர் ராவ். இவரது பாரதிய ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு எதிராக பிரச்சார கனைகளை வீசி வருகின்றன காங்கிரஸும், பாஜகவும்..!

Amitshah


சமீபத்தில் பிரச்சாரம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா “இந்த தேர்தல் பாஜக வேட்பாளர்களை எம்.எல்.ஏ ஆக்குவதற்கான தேர்தல் மட்டுமல்ல. தெலுங்கானாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கேசிஆர் தெலுங்கானாவுக்கு செய்தது என்ன? வேலையில்லாதவர்களுக்கு வேலை? 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஆகியவை கட்டி முடிக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சீன தயாரிப்புகள் போல எந்த கேரண்டியும் இல்லாதவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.



மறுபுறம் காங்கிரஸுக்காக பிரச்சாரத்தில் இறங்கியுள்ள ராகுல்காந்தி “தெலுங்கானாவில் தற்போது நில பிரபுத்துவ அரசு நடந்து வருகிறது. காங்கிரஸ் என்ன செய்தது என்று கேசிஆர் கேட்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் கேசிஆர் என்ன செய்தார் என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும். நாட்டிலேயே மிகவும் ஊழல் மலிந்த ஆட்சியை கே.சந்திரசேகர் ராவ் நடத்தி வருகிறார்” என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து பாஜக – காங்கிரஸ் கட்சிகள் கேசிஆரை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்தரப்பையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த மும்முனை போட்டியால் தெலுங்கானாவில் அரசியல் நிலவரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

Edit by Prasanth.K