1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (16:23 IST)

பாஜக பரிதாப நிலை: கைக்கோர்த்த காங்கிரஸ் - பட்டேல் சமூகத்தினர்!!

குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. 

 
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி சுலபமாக இருக்காது என தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் துணையாக இருந்த பட்டேல் சமூகத்தினர் பாஜக-வை எதிர்ப்பது. 
 
பட்டேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பினை ஹர்தீக் பட்டேல் துவங்கினார். 
 
பட்டேல் சமூகத்தினர் தற்போது பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். பாஜக-வை தோற்கடிப்பதையே கொள்கையாக கருதுகின்றனர். இதனால், காங்கிரஸுக்கு ஆதாயம் கிடைத்தாலும் அதை பற்றி கவலை இல்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், ஹர்தீக் பட்டேலின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்று கொண்டதாக தெரிகிறது. அதாவது, பட்டேல் இனத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாம்.
 
இது குறித்து பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்தீக் பட்டேல் கூறியதாவது, காங்கிரஸ் எங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளது. காங்கிரசிடம் எந்த தொகுதியையும் கேட்கவில்லை. 
அடுத்த இரண்டரை வருடங்களுக்கு எந்த கட்சியிலும் போட்டியிடமாட்டேன் அதேபோல் எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன்.
 
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னர் ஒரு மாதத்திற்குள் பட்டேல் இனத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மசோதா ஒன்றை நிறைவேற்ற வேண்டும். இட ஒதுக்கீடு கொள்கை பற்றி தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும்.
 
காங்கிரஸுக்கு வெளிப்படையாக நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் பாரதீய ஜனதாவுக்கு எதிராக போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.