1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (11:09 IST)

அசாம் மைந்தர்களின் உரிமையை பறிக்க முடியாது: சர்பானந்தா உறுதி!

அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது என முதல்வர் சர்பானந்தா சோனாவால் உறுதியளித்துள்ளார். 
 
சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர்   போராடி வருகின்றனர்.  
 
போராட்டம் நடைபெறும் இடங்களில் வன்முறை வெடிப்பதால் நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கலவரம் ஏற்படலாம் என கருதப்படும் பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் கால், எஸ்.எம்.எஸ் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது. டெல்லியை தொடர்ந்து தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருவதால் அசாமிலும் செல்போன் இணையதள சேவை முடக்கப்பட்டது.   
 
தற்போது செய்தியாளர்களிடம் பேசிய  முதலமைச்சர் சர்பானந்த சோனோவால்,  அசாமில் இயல்புநிலை முழுவதும் திரும்பிவிட்டது. மாநிலம் முழுவதும் அமைதி நிலவுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால், அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமைகளுக்கும், மக்களின் அடையாளம், மொழி, கலாசாரத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.