திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 மே 2024 (15:14 IST)

வோடோபோன் ஐடியாவுடன் இணைகிறதா பி.எஸ்.என்.எல்? ஊழியர்கள் கொடுக்கும் ஐடியா..!

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனாளிகளுக்கு 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் இன்னும் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்கள் பயனாளர்களுக்கு 3ஜி சேவை மட்டுமே வழங்கி வருவதால் ஏராளமான பயனாளிகள் அதிலிருந்து வெளியேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் பிஎஸ்என்எல் பயனாளிகளை தக்க வைத்துக்கொள்ள வோடபோன் ஐடியாவுடன் பிஎஸ்என்எல் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இதன் மூலம் பிஎஸ்என்எல் பயனாளிகளுக்கு நேரடியாக 5ஜி சேவையை வழங்கலாம் என்றும் ஊழியர்கள் தரப்பில் இருந்து ஐடியா கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மட்டும் பயனாளிகள் குறைந்து கொண்டே வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் மட்டும் 23 லட்சம் பயனாளிகளை பிஎஸ்என்எல் இழந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த சிக்கலை சரி செய்யும் வகையில் வோடபோன் ஐடியாவின் நெட்வொர்க்கை தற்காலிகமாக பிஎஸ்என்எல் பயன்படுத்தலாம் என்றும் அதன் மூலம் பயனர்கள் வெளியேறுவதை தடுக்கலாம் என்றும் ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது 
 
ஏற்கனவே வோடோபோன் ஐடியாவின் பங்குகள் மத்திய அரசிடம் இருப்பதால் வோடபோன் ஐடியாவுடன் இணைந்து பிஎஸ்என்எல் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்றும் ஐடியா கூறப்பட்டு வருகிறது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran