ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (12:18 IST)

இமயமலையில் 1968ஆம் ஆண்டு நடந்த விமான விபத்து.. 56 ஆண்டுகளுக்கு பின் உடல்கள் மீட்பு..!

இமயமலையில் கடந்த 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் பலியானவர்களின் உடல் 56 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்திய விமானப்படை சொந்தமான விமானம் 102 வீரர்களை ஏற்றுக்கொண்டு 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில்  திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்த 102 பேரும் பலியாகிவிட்டனர் என அறிவிக்கப்பட்டது.
 
இறந்தவர்களின் உடல்களை தேடும் பணி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த 2003ஆம் ஆண்டு, மலையேறும் நிபுணர்கள் விமானத்தின் சிதறிய சில பாகங்களை கண்டுபிடித்த நிலையில், 2019ஆம் ஆண்டு ஐந்து பேர்களின் உடல் மீட்கப்பட்டது. தற்போது, இந்திய ராணுவத்தின் மலையேறும் நிபுணர்கள் நான்கு பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணியில், மூவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள் மல்கான் சிங், சிப்பாய் நாராயண் சிங், மற்றும் தாமஸ் சரண் ஆவர்.
 
தாமஸ் சரண், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள எலந்தூரைச் சேர்ந்தவர். அவரது தாயாரிடம், தாமஸ் சரண் உடல் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ராணுவ ஆவணங்களின் உதவியுடன், மல்கான் சிங்கின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவப் படையில் பணியாற்றிய சிப்பாய் நாராயண் சிங்கும், அதேபோல அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கர்வாலில், சாமோலி தாலுகா கோல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொரு உடலை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.  
 
 
Edited by Mahendran