பீகாரில் கள்ளச்சாரயம்; உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு! – பலருக்கு கண்பார்வை பாதிப்பு!
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் சட்டத்திற்கு புறம்பாக காய்ச்சப்படும் கள்ளச்சாராய விற்பனை பல பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2ம் தேதியன்று நாக பஞ்சமியையொட்டி கூடிய சிலர் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர்.
அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை கள்ளச்சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் கண் பார்வையை இழந்துள்ளனர். அவர்கள் குடித்த கள்ளச்சாராயம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.