கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனையில் வைத்து வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.கே.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருத்தரங்கு கூடத்தில் கடந்த 9ம் தேதியன்று பயிற்சி பெண் மருத்துவர் அரை நிர்வாணமாக பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனையில் அவர் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை மம்தா அரசு காப்பாற்ற முயற்சிப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில் பெண் மருத்துவர் மரணத்தை தொடர்ந்து கல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த போராட்டம் தேசிய அளவில் வலுப்பெற்றுள்ளது. இன்று நாடு முழுவதும் பெண் பயிற்சி மருத்துவரின் கொலையில் நியாயமான விசாரணையை வலியுறுத்தி மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது. ஆனால் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல இயங்கி வருகிறது.
Edit by Prasanth.K