1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (19:37 IST)

பொய்யான செய்தி வெளியிட்டால் ஊடகங்கள் மீது வழக்கு: முதல்வர் எச்சரிக்கை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்கள் என்றால் பொதுமக்கள் மத்தியில் ஒரு மரியாதை இருந்தது. அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே செய்திகளை உருவாக்கி அதனை வெளியிட்டு வந்தனர். ஆனால் தற்போது டைப் அடிக்க தெரிந்தவர்கள் அனைவருமே செய்தியாளர்கள் ஆகிவிட்டனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு செய்தி என்ற பெயரில் வதந்தியை வெளியிடுவது தொடர் கதையாகி வருகிறது 
 
இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆந்திர அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு குறித்து தவறான, பொய்யான, அவதூறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் மீது வழக்கு தொடரப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே இதே போன்ற ஒரு அறிவிப்பை ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி அவர்கள் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்தார். ஆனால் அப்போது கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அந்த சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாவது அதிகரித்துள்ள நிலையில் இந்த சட்டம் இம்முறை உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது 
 
ஆதாரமற்ற செய்திகள், பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது வழக்கு தொடர அரசு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படவுள்ளதாக அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது