புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (16:28 IST)

சரிந்து விழுந்த குடலை தாங்கிக் கொண்டு 10 கி.மீ நடந்த மனிதர் – உயிர் பிழைத்த ஆச்சர்யம்

தெலுங்கானாவில் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஒருவர் வயிறு அறுபட்ட நிலையில் 10 கி.மீ நடந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 38 வயது கூலி தொழிலாளி சுனில் சஹான். இவர் இவரது அண்ணன் ப்ரவீன் மற்றும் சில பேரோடு வேலை தேடி நெல்லூருக்கு வந்துள்ளார். இரவு நேரத்தில் ரயில் வராங்கல் மாவட்டத்தில் உள்ள உப்பல் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தபோது இயற்கை உபாதையை கழிக்க கழிவறை நோக்கி சென்ற சுனில் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்தவர் இரு தண்டவாளங்களுக்கு இடையே விழுந்துள்ளார். ஒரு இரும்பு கம்பி கிழித்ததில் அவர் வயிறு அறுபட்டு குடல் சரிந்தது. தலையிலும், உடல் பகுதிகளிலும் பலத்த அடிப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் பயணிகள் தூங்கி கொண்டிருந்ததால் அவர் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. கீழே விழுந்ததில் அவரது செல்போனும் இருட்டில் எங்கோ விழுந்து விட்டதால் அவரால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியாத நிலை.

உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட சுனில் தனது சட்டையை கழற்றி வயிற்றை இருக கட்டிக்கொண்டுள்ளார். பிறகு அருகில் ஏதாவது ஊர் தென்பட்டால் உதவி கிடைக்கும் என கருதி நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

தொடர்ந்து 10 கி.மீ தூரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடந்தவர் கடைசியாக ஹசன்பர்த்தி ரயில் நிலையத்தை வந்தடைந்திருக்கிறார். அவரை பார்த்ததும் நிலைமையை புரிந்து கொண்ட நிலைய அதிகாரி உடனடியாக ஆம்புலன்ஸை வர செய்து சுனிலை மருத்துவமனையில் அனுமதித்தார். நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு அதிர்ஷ்டவசமாக சுனில் உயிர் பிழைத்தார்.

நினைவு திரும்பியதும் விபத்து குறித்து சுனில் கூறியிருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 கி.மீ தூரம் சுனில் பயணித்து வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பிரமிப்பையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.