விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்கு.! விதிகளை மீறிய புகாரில் நடவடிக்கை..!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் (கேளிக்கை விடுதி) மீது பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடுவது, தவிர மற்ற சில வியாபாரங்கலும் செய்து வருகிறார். அந்த வகையில், விராட் கோலி இணை உரிமையாளராக இருக்கும் ஒன்8 கம்யூன் என்ற கேளிக்கை விடுதி பெங்களூர் சின்னசாமி மைதானம் அருகில் இயங்கி வருகிறது.
மிகவும் பிரபலமான இந்த கேளிக்கை விடுதியில் இருந்து அதிக சத்தம் வருவதாக நேற்று இரவு அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பெங்களூருவில் ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் விராட் கோலிக்கு சொந்தமான கேளிக்கை விடுதி, விதிகளை மீறி நள்ளிரவு ஒரு மணியை கடந்து இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஒன்8 கம்யூன் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்8 கம்யூன் மட்டுமின்றி பெங்களூரு முழுக்க நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக நேரம் சட்டவிரோதமாக இயங்கி வந்த பல்வேறு பார்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.