திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (12:12 IST)

நாடு முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பு..! தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவு..!!

Vote
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
 
18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நாடு முழுவதும் தற்போது  நடைபெற்று வருகிறது. தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
தமிழகத்தில் காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள 68,321 வாக்குப்பதிவு மையங்களில் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும், திரையுலக பிரபலங்களும் வாக்குச்சாவடி மையங்களில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
 
11 மணி நிலவரம்:
 
தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 27.63% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விளவங்கோடு இடைத்தேர்தலில் 17.09% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.