மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர்..! பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்..!!
தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஏப்ரல் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமரின் பிரச்சார விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான வாக்குகளை பெற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியும் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
தோல்வி பயம் வந்த காரணத்தினால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.