ஆரத்தி எடுத்ததற்கு பணம்..? அண்ணாமலைக்கு சிக்கல்..!!
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு அண்ணாமலை பணம் கொடுத்தது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அது குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கு ஆரத்தி தட்டிற்கு கீழே மறைத்து வைத்து பணம் கொடுப்பது போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கோவையில் ஆரத்தி எடுப்பவருக்கு தட்டில் மறைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், சம்பந்தப்பட்ட வீடியோவை காவல்துறையின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.