அனுமதியின்றி கூட்டம்..! சௌமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு..!!
தேர்தல் விதிகளை மீறியதாக தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 27-ம் தேதி சௌமியா அன்புமணியை ஆதரித்து, அமமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. இதுகுறித்த தகவலறிந்த பறக்கும் படை அதிகாரி அண்ணாதுரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், அமமுக மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.