வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (13:42 IST)

எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி..! 10 தொகுதிகளின் விவரம் இதோ.!!

dmk -congress
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை திமுக போட்டியிட்ட கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
 
மக்களை தேர்தலை ஒட்டி தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த 9ஆம் தேதி ஆலோசனை நடத்தினர். சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினர். இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.
 
அதில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கையெழுத்தானது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், கன்னியாகுமரி, திருவள்ளூர் (தனித்தொகுதி), கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக கையெழுத்து ஒப்பந்தமாகியுள்ளது. 
 
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்று நிலையில், இந்த முறை அந்த மூன்று தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், தங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்றிருப்பதாகவும், 2 அல்லது 3 நாட்களில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.