தேமுதிகவிற்கு அதிமுக அழைப்பு..! விரைவில் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை..!!
மக்களவைத் தேர்தலை ஒட்டி மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு வருமாறு தேமுதிகவிற்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மார்ச் 1-ம் தேதி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்ட குழு சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் அதிமுக உடனான கூட்டணிக்கு தேமுதிக சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, குழு அமைத்த பின்பு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
இதை அடுத்து மார்ச் 5 ஆம் தேதி 2-வது முறையாக அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது. இதிலும் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மக்களவைத் தொகுதியுடன் சேர்த்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என பிரேமலதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால் அதிமுக தேமுதிக இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்து வந்தது
இதனிடையே பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவிற்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.