மோடி சொன்ன வாரிசு அரசியல் – ஓ.பி.எஸ்-ன் பதில் !
சமீபத்தில் தேனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி ஓபிஎஸ்-ன் மகனை அருகில் வைத்துக்கொண்டே வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் எனக் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியது.
முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. பிரச்சாரம் 16 ஆம் தேதியுடன் முடிவடைவதால் சுட்டெரிக்கும் வெயிலிலும் அரசியல்வாதிகள் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம் வந்த மோடி தேனியில் ஓபி ரவிந்தரநாத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்’ காங்கிரஸும் திமுகவும் என்னால் நிம்மதி இல்லாமல் உள்ளனர். காங்கிரஸின் நிதியமைச்சராக சிதம்பரம் இருந்த போது அவரது மகன் இந்த நாட்டைக் கொள்ளையடித்தார். இந்தியா வளர்வதைக் காங்கிரஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி குடும்ப அரசியலை பாஜக ஒழிக்கும்’ எனக் கூறினார்.
ஓபிஎஸ்-ன் வாரிசான ரவிந்தரநாத்துக்கு வாக்கு சேகரிக்க வந்த மோடி அந்த மேடையிலேயே இவ்வாறு பேசியது கேலிக்குள்ளானது. அதையடுத்து இது குறித்து ஓபிஎஸ்-டம் கேள்வி எழுப்பிய போது ‘வாரிசாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தகுதி வேண்டும். மக்களிடம் செல்வாக்கு பெறுவார்களானால் அரசியலில் நிலைத்திருப்பார்கள். இல்லையென்றால் அரசியலில் அவர்களுக்கு இடம் இல்லை’ எனக் கூறினார்.