பாஜகவுடன் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக இருப்பதால், அதிமுக 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகள் என எல்லா இடத்திலும் வெற்றியை பெறும் என உற்சகத்துடன் பேசுகிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார். பேட்டியிலிருந்து:
கேள்வி:நீங்கள் எதிர்பார்ப்பது போல வெற்றி கிடைக்காமல் போனால், உங்கள் ஆட்சிக்கு வரும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வீர்கள்?
பதில்: முதல் கேள்விக்கு பதில் நேர்மறையானது என்பதால் இரண்டாவது கேள்விக்கு இடமே இல்லை. நாடாளுமன்ற தொகுதிகள், சட்டமன்ற இடைத்தேர்தல் என இரண்டிலும் வெற்றி பெறுவோம்.
மகத்தான வெற்றியை பெறுவோம். தமிழ்நாட்டில் அம்மாவின் அலை வீசிக்கொண்டிருக்கிறது. நீந்த தெரிந்தவனுக்கு ஆழத்தைப் பற்றிய கவலை இல்லை. நன்றாக படிக்கும் மாணவனுக்கு தேர்வு குறித்த பயம் இருக்காது. அதேபோல, எங்களுக்கு இந்த தேர்தல் பற்றிய கவலை இல்லை. தமிழ்நாட்டில் எந்த குறையும் இல்லை..
கேள்வி:தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தானாக முன்வந்து போராட்டங்கள் நடத்துகிறார்கள். மீத்தேன்,ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது என கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பல போராட்டங்களை மக்கள் நடத்தியுள்ளார்கள். குறைகள் இருப்பதால்தானே மக்கள் போராடுகிறார்கள்?
பதில்: தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஏன் உலக அளவில் கூட போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. போராட்டங்கள் இல்லாமல் வாழக்கை இல்லை.
வாழ்வதற்கு போராட்டம் தேவை என்பதுதான் டார்வின் தியரி. ஒவ்வொருவரும் பிறக்கும்போதே போராடிதான் பிறக்கிறோம். ஒரு அரசு எந்த அளவில் மக்களின் எதிர்பார்ப்புளை பூர்த்தி செய்கிறது என்பதுதான் முக்கியம். தமிழ்நாட்டில் நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கு யார் மூலகர்த்தா என்பதை பார்க்கவேண்டும். போராட்டம் வருவதற்கு காரணமான திட்டங்கள் என்ன, அவற்றை யார் தொடங்கியது என்பதை பார்க்கவேண்டும்.
நியூட்ரினோ, கதிராமங்கலம், மீத்தேன் பிரச்சனை, கச்சதீவை யார் தாரைவார்த்து கொடுத்தது, முல்லைபெரியார் பிரச்சனையை சொதப்பியது யார், நீட் தேர்வுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியது யார்? தமிழகத்தில் பிரச்சனைகள் உருவாக்குவதற்கு மூலகாரணமாக இருப்பது திமுக-காங்கிரஸ்தான். இவர்கள் உருவாக்கிய பிரச்சனைக்களுக்கு நாங்கள் தீர்வு கண்டுபிடித்துவருகிறோம்.
உதாரணத்திற்கு காவிரி நதிநீர் பிரச்சனை பலஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்தது. அதிமுகதான் சட்டப்போராட்டம் மூலமாக தீர்வு கண்டு அரசிதழில் வெளியிட்டு நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது.
நீட் பிரச்சனையில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பதுதான் அதிமுகவின் முடிவு. நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு வேறுவிதமாக இருந்தாலும், எங்களுடைய முடிவில் மாற்றம் இல்லை.
கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. இடஒதுக்கீடு பிரச்சனையில் 50 சதவீதத்திற்கு மேலாக ஒதுக்கீடு செய்யக்கூடாது என மண்டல் கமிஷன் கூறியபோது, அம்மா(ஜெயலலிதா) தமிழகத்தில் 69 சதவீதமாக இருக்கும் என்பதை பிரதமரிடம் நேரடியாக பேசி, சட்டத்திருத்தம் கொண்டுவந்து, தமிழகத்திற்கு விலக்கு பெற்றார்கள். நான் 1991ல் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தேன் என்பதால் நேரடியாக இந்த விவகாரத்தை பற்றிய தகவல் எனக்கு முழுமையாக தெரியும் என்பதால் சொல்கிறேன்.
கேள்வி: டிடிவி தினகரன் அதிமுகவின் வாக்குகளை எடுத்துக்கொள்வார் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம் அதிமுக என்றும் அது வலிமையான இயக்கம் என்றும் கூறியிருந்தார். தற்போது அதிமுகவில் இருந்த தொண்டர்களில் சிலர்தான் அமமுகவில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், அதிமுகவின் வலிமை குறைந்துவிட்டதா?
அதிமுக மாபெரும் இயக்கம். தலைவர் (எம்ஜிஆர்) அரும்பாடுபட்டு இயக்கத்தை ஏற்படுத்தினார். பத்து ஆண்டுகள் திமுகவை கோட்டை பக்கம் வரவே விடவில்லை. அவரின் மறைவுக்கு பின், அம்மா(ஜெயலலிதா) பதவியேற்று சிறப்பாக ஆட்சி நடத்தினார். அவரும் திமுகவுக்கு சவாலாகவே இருந்தார். இனியும் அதேதான் தொடரும். எங்கள் அமைப்பில் இருந்து சென்ற ஒரு சிலர், சொற்பமான வாக்குகளை பெறுவார்கள். ஆனால் எங்களின் வாக்குவங்கியை அவர்கள் குலைக்கமுடியாது.
கேள்வி: இந்திய அளவில் ஓட்டுக்காக பணம் கொடுப்பது என்ற கலாச்சாரம் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது என்ற கருத்து நிலவுகிறது. கட்சிகள் பணம் கொடுகிறார்களா? பணம் வாங்கிக் கொண்டு மக்கள் ஓட்டு போடுகிறார்களா? யார் பக்கம் தவறு?
மக்களும் கேட்கக்கூடாது, அரசியல் கட்சிகளும் கொடுக்கக்கூடாது. பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது என்பது திமுகவின் செயல்தான். இப்போது இல்லை, எம்ஜிஆர் திண்டுக்கல் தொகுதியில் நின்றபோது, அவரை தோற்கடிக்க திமுக பணம் கொடுத்தது, மிகவும் பிரபாலமான திருமங்கலம் பார்முலா திமுக நிகழ்த்தியதுதான்.
மக்கள் பணம் வாங்கி ஓட்டு போட்டால், அவர்களின் உரிமைகளை கேட்டு பெறமுடியாது என்பதால் பணம் வாங்குவதும் தவறு, பணம் கொடுப்பதும் தவறு. சுயநல நோக்கத்தில், வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் கட்சிகள் கொடுத்தால்கூட மக்கள் வாங்ககூடாது. சமீபத்தில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் பலகோடி கைப்பற்றபட்டது. விசாரணை தொடங்கிவிட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளை தடுத்துநிறுத்தி, நேர்மையான தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை.
கேள்வி: அதிமுகவைப் பொறுத்தவரை கட்டுப்பாடு நிறைந்த கட்சி என்று ஜெயலலிதா சொல்லிவந்தார். அதற்குபிறகும் உங்களைப் போன்ற மூத்த அமைச்சர்கள் அதையே சொல்கிறீர்கள். ஆனால் சமீபத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டணி கட்சியின் சின்னத்தை தவறாக குறிப்பிட்டது, செம்மலை ஒரு அதிமுக தொண்டரை கன்னத்தில் அறைந்தது என சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியாகியுள்ளன. உங்கள் கட்சியில் ஜெயலலிதா இல்லாததால் பல தலைவர்கள் உருவாகிவிட்டனரா?
அம்மாவோடு (ஜெயலலிதா) யாரையும் ஒப்பிட முடியாது. அவர் பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஆளுமை. தற்போது, இந்த கட்சி நன்றாக செயல்பட்டு வருகிறது. இது ஒரு பெரிய கட்சி என்பதால், சில சமயம் யாரவது தவறு செய்யலாம். அதேபோல தவறு யார் செய்தலும் தவறுதான். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் கட்சியினருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.