இன்னும் சோதனை நடந்தால் 10,000 கோடி கிடைக்கும் – அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்புப் புகார் !
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தினால் 10,000 கோடி ரூபாய் வரைப் பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் முதல்முறையாக மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் ’என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை’ என்றார். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை துரை முருகன் மறுத்தார்.
அதையடுத்து ஒருநாள் இடைவெளியில் நேற்று மீண்டும் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் கொடவுனில் நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை மூட்டையாகப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் வேலூர் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக அனுப்பவேண்டிய விவரங்களும் அதன் கவர்களில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதனால் வாக்குகளுக்குப் பணம் கொடுத்ததாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா அல்லது வேலூர் தொகுதிக்கே தேர்தல் நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ரெய்டு குறித்து திமுக தரப்பில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் சார்புள்ள சோதனை எனவும் இதனால் திமுக வேட்பாளரின் வெற்றியைத் தடுத்து நிறுத்த நினைப்பதாகவும் கூறப்படுகிறர்கிறது. இதையடுத்து ரெய்டு குறித்து பேசியுள்ள அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ‘வருமான வரித் துறை என்பது சுதந்திரமான அமைப்பு. அவர்களுக்குக் கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் சோதனை நடத்துவார்கள். இப்போது 10 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. இன்னும் திமுக முக்கிய பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இல்லங்களில் வருமான வரி சோதனை நடத்தினால் கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் கோடி வரை கிடைக்கும்.’ என அதிர்ச்சியளிக்கும் செய்தியைக் கூறியுள்ளார்.