திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (06:16 IST)

துரைமுருகனை அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டிலும் சோதனை!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வருமான வரித்துறையினர் அரசியல்வாதிகளின் வீடுகளில் சோதனை செய்து மூட்டை மூட்டையாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக துரைமுருகனும் அவருடைய மகன் மற்றும் நண்பர்களும் குறி வைக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் துரைமுருகனை அடுத்து நேற்றிரவு திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்றிரவு அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக இருந்தபோது திடீரென அவரது வீடு இருக்கும் தண்டுபத்து  கிராமத்திற்கு அதிகாரிகள் வந்தனர்
 
முதலில் தங்களை பறக்கும் படை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்ட அதிகாரிகள், பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னுடைய வீடு மற்றும் தோட்டத்தில் சோதனை என்ற தகவல் அறிந்ததும் அனிதா ராதாகிருஷ்ணன் உடனே வீட்டிற்கு திரும்பினார். நேற்றிரவு விடிய விடிய அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்ததாக தெரிகிறது. 
 
தூத்துகுடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவாக அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது