மத்திய சென்னையில் முன்னாள் நீதிபதி வேட்புமனுத்தாக்கல் !
மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் நீதிபதி கர்ணன் போட்டியிடுவதாக அறிவித்து நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதிபதி கர்ணன். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவுகளைப் பின்பற்றாததால் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்றும் அவர் தனது புகார்களை மீண்டும் கூறினார்.
இதனால் அவர் மீதி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டு அவருக்கு 6 மாத காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் 6 மாத சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையானார். அதையடுத்து தீவிர அரசியலில் இறங்கும் பொருட்டு ஆண்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார்.
தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்காக நேற்று சென்னையில் அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். பின்னர் ‘மத்திய மாநில அரசுகள் சரியான நிர்வாகத்தை வழங்காததால், தான் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்’ எனத் தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் 35 இடங்களில் அவரது கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.