புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (08:52 IST)

கருத்துக்கணிப்பு முடிவுகள் – டெட்லைன் விதித்த தேர்தல் ஆணையம் !

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட ஏப்ரல் 9 ஆம் தேதியே கடைசி நாள் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடுவதில் ஊடகங்கள் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் மக்கள் மீது தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கணவே சில கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட ஏப்ரல் 9 ஆம் தேதியே கடைசி நாள் என்று தமிழக தேர்தல் அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ ‘ முதல் கட்ட பிரச்சாரம் முடியும் நாளான ஏப்ரல் 9 வரை மட்டுமே கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடலாம். அதிலிருந்து மே 19 வரை கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.