1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (09:00 IST)

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ! – பின்னணியியில் இவரா ?

தமிழகத்தில் பெரும்பாலானக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இன்று வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்னும் பாஜகவும் காங்கிரஸூம் மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளன.

பாஜக தனது வேட்பாளர்களை உறுதி செய்து வெளியிடத் தயாராக இருந்த நிலையில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழந்ததை அடுத்து வேட்பாளர் அறிவிப்பைத் தள்ளி வைத்துள்ளது. அதனால் விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் சார்பில் இன்னும் எந்த அறிகுறியும் தெரியவில்லை.

ஏன் தாமதம் என காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது தாமதத்திற்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இளங்கோவன் தன் சொந்தத் தொகுதியான ஈரோட்டில் போட்டியிட நினைத்துள்ளார். ஆனால் திமுக கூட்டணியில் அதை மதிமுகவுக்கு ஒதுக்கியுள்ளனர். அதனால் காங்கிரஸில் இளங்கோவனுக்கு சீட் கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் இளங்கோவனோ தனக்கு கண்டிப்பாக சீட் வேண்டும் என பிடிவாதமாக இருப்பதால் அவருக்கான சீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து டெல்லி தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.