புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (10:25 IST)

மதுரையில் வாக்குப்பதிவு 2 மணிநேரம் நீட்டிப்பு – அச்சத்தில் பெண் ஊழியர்கள் !

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வாக்குப்பதிவு நேரம் 2 மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் பெண் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் மே 21 வரை 7 கட்டமாக நடக்க இருக்கிறது. அதில் ஒரே கட்டமாக தமிழகத்திற்கு ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. அன்றைய தினம் மதுரையில் சித்திரை தேரோட்டம் நடைபெறவிருப்பதால் மதுரையில் மட்டும் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிக்கை வலுத்துவருகிறது. இது சம்மந்தமாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிவைக்க மறுத்துள்ளது. அதற்குப் பதிலாக வாக்குப்பதிவு நேரத்தை 2 மணிநேரம் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடியும் வாக்குப்பதிவு மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகளை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க அதிகாலை வரை ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாக்க வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளும் தங்க வேண்டும். மேலும் வாக்குப்பதிவு முடிந்தும் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் சுகாதார வசதிகள் இல்லாத வாக்குச்சாவடிகளில் பெண் ஊழியர்கள் எப்படித் தங்குவது என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் தேர்தல் ஆணையம் குழம்பியுள்ளது.