கல்லாபெட்டி சிங்காரம் எடப்பாடி... திமுகவில் இணைந்த அதிமுக முக்கிய பிரமுகர் விமர்சனம்

Last Updated: திங்கள், 18 மார்ச் 2019 (21:24 IST)
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் சீட் கிடைக்காத விரக்தியில் திமுக தரப்பிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். 
 
மக்களவை தேர்தலுக்காக திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் நேற்று அதிமுகவும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
 
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான ராஜகண்ணப்பன் மக்களவை தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர் எந்த தொகுதியிலும் முன் நிறுத்தப்படவில்லை. 
 
இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தியடைந்த அவர், திமுகவில் இணைந்தார். ஸ்டாலின் சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு, 
 
ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி இந்தியாவின் நலனுக்காகவும், தமிழகத்தின் தன்மானத்துக்காகவும் அமைக்கப்பட்ட கூட்டணி. அதிமுகவில் கூட்டணியில் அப்படி என்ன இருக்கிறது?  
கல்லாபெட்டி சிங்காரம் யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிசாமிதான். இபிஎஸ், ஓபிஎஸ் இடையே நிறைய பிரச்னைகள் உள்ளது. அதிமுகவில் உட்கட்சி பூசல் வேறு நிறைய இருக்கு. 
 
ஓபிஎஸ் தனது மகனுக்காக 10 சீட்டை தாரை வார்த்தால் என்ன நியாயம். நோட்டாவுக்கு கீழே உள்ள பாஜகவுக்கு தென் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் சீட் வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் கொத்தடிமையாக இருக்கிறது அதிமுக. 
 
பாஜகவின் பேச்சை கேட்டு கட்சியை அடகு வைத்துவிட்டனர். திராவிட பூமியாக இருக்கக் கூடிய தமிழகத்தில் எதுக்கு பாஜகவுக்கு இவ்வளவு சீட். உண்மையான தலித்துக்கு அதிமுகவில் சீட் இல்லை.
 
திமுக கூட்டணியை ஆதரித்து, நாளை முதல் பிரச்சாரம் போகப்போறேன். கட்சியில் எல்லாரையும் கேட்டுவிட்டுதான் ஆதரவு தெரிவித்துள்ளேன் என கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :