சாதிக்கத்துடிக்கின்ற இளைஞர்களுக்கான கட்டுரைத் தொடர் இது.
இந்த உலகில் பிறந்த உயிர்களிலேயே மனிதர்களுக்குத்தான் தன் குறிக்கோளை அடையத் திட்டமிட்டுச் செயல்படுத்த பகுத்தறிவைப்போல் சக்திமிக்க ஆற்றலுண்டு.
பசிக்கும்போது வயிற்றிற்கு உணவும், கண்சொக்கும் போது, உறக்கமும், மானத்தை மறைக்க உடையும் மட்டுமே கொண்டிருந்தாலும், இவைகள் நமக்கு பழுதின்றிக் கிடைக்கக்கூட நாம் அவசியம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
விலங்குகளுக்கும், பறவைகளுக்கும்கூட அது உண்டுதான் என்றாலும் மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாதென்ற மாமேதை கார்ல் மார்க்ஸின் தத்துவத்தின்படி, ஓடி ஓடி உழைக்கின்ற வர்க்கத்திற்குத்தான் இது பொருந்திப் போகிறது.
விலங்குகளும், பறவைகளும் நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படுவதில்லை; அடுத்த வேளை உணவைப் பற்றிக் கூட அவை பெருதுபடுத்துவதில்லை; ஆனால், இதற்கான உழைப்பிற்கு மட்டும் அவை சலித்துக் கொள்வதேயில்லை என்பதுதான் ஆச்சர்யம்!
ஒரு மான் ஆற்றில் இறங்கி நீர் குடித்துக் கொண்டிருந்தது. அதன் நேரம் அப்போது, சட்டென்று ஒரு முதலை ஒரு சுவையான விருந்து கிடைத்ததென்று எண்ணி அதை விழுங்கப்பார்த்தது. நீண்ட நாள் கழித்து, மானின் சதையை ருசிக்க வேண்டி முதலையும், அதனிடம் இருந்து தப்பிக்க வேண்டி அந்த மானும் ஓடின.
மான் நீருக்குள் தரையில் தன் கால் தட்டுமளவு ஓடி, ஓடி, முதலைக்குப் போக்குக்காட்டிவிட்டு, ஒருவழியாகத் தப்பித்தது.
பசிக்காக ஏங்கவில்லை முதலை; ஆனால், மானோ தன் உயிரைக் காக்கப் படாதபாடு பட்டு கரை சேர்ந்தது. இதில், ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கிய தன் தவற்றை உணர்ந்துகொண்டு. இனிமேலாவது எங்கு சென்றாலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்று தனக்குத் தானே கற்பித்துக் கொண்டது.
நாமும் அதுபோல்தான்.
இங்கு எல்லோருக்கும் முதலை விருந்திற்கு ஆசைப்பட்டதுபோல் அத்தியாவசியத்தின் மீது மட்டும் கவனம் செலுத்திவிட்டு, அதைத்தாண்டி முழு ஆற்றலை வெளிப்படுத்துவதைக் கோட்டைவிட்டும் வெற்றி பெறாமல், மனதிற்குள் நேர்ந்துகொண்ட குறிக்கோளுக்குச் சரியான உழைப்பென்ற தீனியைப் போடாமல் பாதியிலேய முயற்சிகளை முடித்துக் கொள்கிறோம். தோல்வியை மாலையிட்டு வரவேற்று நாமே வெற்றியைக் குழிதோண்டிப்புதைக்கிறோம்.
அதனால்தான் சில மனிதர்களால் மட்டும் குறிக்கோளை அடைய முடிகிறது. அவர்களின் வாழ் நாட்கள் முடிவுக்குள் வெற்றிச் சிகரத்தில் ஏறி அமர்ந்து அங்கு வலுவான ஆட்சி செய்கிறார்கள்.
நாம் அவர்களைப் பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கிறோம்.
அதனால், நாம் எதில் முன்னேற வேண்டும் என்று சிந்தித்தாலே போதும், நம்மை அதற்கான படிநிலைகளில் நம்மைக் கொண்டு செல்லும் ஆற்றல் எல்லாமே நம்மிடமே உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருபாய் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தை ஸ்தாபிப்பதது அப்படித்தானே.
இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் இதற்கென்று தங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியதால் தானே அந்த இடத்தை அடைய முடிந்திருக்கிறது.
நான் சமீபத்தில் தமிழ் எம்.ஏ தேர்வு எழுத ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அங்கு எங்கள் தேர்வறைக்கு வந்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எல்லாம் 18 லிருந்து 35 வயதிற்குள் இருக்கும்! ஒருவரைத் தவிர! அவருக்கு வயது சுமார் 50 லிருந்து 55 இருக்கலாம் என்பது என் கணிப்பு!
அவரை அந்த தேர்வறை கண்காணிப்பில் இருந்த பேராசிரியரே பார்த்து ஆச்சரியப்பட்டார்.
அவர் தன் பதவி உயர்வுக்கான அந்த எம்.ஏ ஜேர்னலிஸம் தேர்வை எழுதியிருக்கலாம், அல்லது அவருக்கு படிப்பின் மீதான அக்கறை தொடர்ந்து கொண்டிருக்கலாம்.
எப்படி இருந்தாலும் அவர் தன் படிப்பின் மீதான குறிக்கோளை விடவில்லை என்று தானே அர்த்தம்.
எப்போது, நாம் உழைக்கின்ற நேரத்திற்கு மேல் கூடுதலாக உழைத்தால், நமக்கான வெற்றி என்பது கண்கூடான சாத்தியம்தான்.
சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை பல கோடிகளுக்கு வாங்கிய டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் தினமும் 17 மணி நேரம் உழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.அதனால்தான், அவர் சார்ந்தவர்கள் யாரும் கார் தொழிற்சாலையோ, அதற்கான துறையிலோ இல்லாமலே கூட இதற்கு முன்னமே யாருமே சிந்திக்காத வகையில் எஞ்சின் இல்லாத காரை, தொழில் நுட்பத்தின் மூலம் படைத்து, பேட்டரி கார்களின் தம் நிறுவனத்தை உலகின் முன்னணி நிறுவனமாக உருவாக்கியுள்ளார்.
இதற்கெல்லாம் பரம்பரை கோடீஸ்வரர்களாகவும், வசதி வாய்ப்புள்ளவகளாகவும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை; நம் சொந்த முயற்சியும், தேடலும், இருந்தாலே குறிக்கோளை நம்மால் அடைய முடியும். வெற்றியாளர்களாகக் கால்பதிக்க முடியும்!.
#சினோஜ்