1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 29 மார்ச் 2025 (16:26 IST)

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

கோடையில் அதிக வெப்பத்தில் அலைந்தால்,  நீர்ச்சத்து குறைவு, சருமக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதனுடன், சிறுநீர்ப் பாதை தொற்று (நீர்க்கடுப்பு) ஏற்படும் அபாயமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
 
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் "உடலில் உள்ள ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க சிறுநீரகங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 10 லட்சம் நெப்ரான்கள் உள்ளன. இவை தேவையற்ற கழிவுகளை வடிகட்டுகின்றன. அத்தகைய கழிவுகள், யூரிடர் எனப்படும் குழாய்கள் வழியாக சிறுநீர்ப் பையில் சேர்ந்து, யூரித்ரா என்ற குழாய் மூலம் வெளியேறுகின்றன. இந்த அமைப்பையே சிறுநீர்ப்பாதை என்று அழைக்கிறோம்.
 
சிறுநீர்ப்பாதையில் கிருமித்தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி, மற்றும் சிரமம் ஏற்படும். இதை அலட்சியமாக விட்டுவிட்டால், இந்த கிருமிகள் சிறுநீரகங்களை பாதிக்கக்கூடும். குறிப்பாக கோடைக் காலத்தில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாதபோது, சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகும். சமீப நாட்களில் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக பெண்கள் புறச்சூழலில் சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்க முடியாததால் அவர்களிடம் கிருமித் தொற்று அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க, தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர், இளநீர், மோர், மற்றும் எலுமிச்சை சாறு போன்ற திரவங்களை அருந்த வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.
 
Edited by Mahendran