வெரி வெரி ஸ்வீட் மொசாம்பி..! வெயிலுக்கு குளிர்ச்சி தரும் மொஸாம்பி சர்பத் 10 நிமிஷத்துல செய்யலாம்!
வெயில் காலங்களில் உடலுக்கு நல்ல நீர்ச்சத்தையும், ஜீரண சக்தியையும் தருவது சாத்துக்குடி ஜூஸ். சாத்துக்குடியை வைத்து குளுகுளு சர்பத் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: சாத்துக்குடி, எலுமிச்சை, சப்ஜா விதைகள், நன்னாரி சர்பத் சிரப், இஞ்சி சிறு துண்டு.
முதலில் சாத்துக்குடியை தோல் உரித்து சுளைகளை எடுத்து கொட்டைகளை நீக்கிக் கொள்ள வேண்டும். கொட்டை நீக்கப்பட்ட சுளைகளை மிக்ஸியில் போட்டு உடன் சர்க்கரை மற்றும் சிறுதுண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் ஒரு பெரிய எலுமிச்சையை பிழித்து சாறு எடுத்து அதை சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் வடிக்கட்டி எடுத்து அதை தூசுகள் இல்லாமல் ஜூஸாக வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு க்ளாஸை எடுத்து அதில் நன்னாரி சிரப் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதனுடன் நாம் தயாரித்து வைத்துள்ள சாத்துக்குடி சாறை ஊற்றி ஸ்பூனால் நன்கு கலக்க வேண்டும். இறுதியாக ஊறவைத்த சப்ஜா விதைகளை அதனுடன் 2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்யப்படும் சாத்துக்குடி சர்பத் அதிக இனிப்பாகவும் இல்லாமல், புளிப்பாகவும் இல்லாமல் புது சுவையில் இருக்கும். நாக்கில் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
Edit by Prasanth.K