அதிரடி காட்ட வருகிறாள் அவெஞ்சர்ஸ் நாயகி: பிளாக் விடோ ட்ரெய்லர்!

Black Widow
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 3 டிசம்பர் 2019 (14:01 IST)
மார்வெல் திரைப்பட வரிசையில் அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் ‘ப்ளாக் விடோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹீரோ படங்களை எடுத்து உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் கல்லாக்கட்டி வரும் நிறுவனம் ‘மார்வெல் ஸ்டுடியோஸ்’. டிஸ்னியின் கிளை நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ் கடந்த மே மாதம் வெளியிட்ட ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்” திரைப்படம் உலகளவில் இரண்டு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்து, உலகில் அதிகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்த படத்தின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் எண்ட் கேம் திரைப்படத்தின் மூலம் 10 வருட மாபெரும் சூப்பர் ஹீரோ சாகச பயணத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த மார்வெல் தற்போது புதிய சூப்பர் ஹீரோ படங்களை தயாரித்து வருகின்றனர். ஆனாலும் பழசுக்கு இருக்கும் மவுசே தனி. அவெஞ்சர்ஸ் கதாநாயகர்களில் தோர், கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன் போன்றவர்களுக்கு தனித்தனியாக நிறைய படங்கள் வந்திருந்தாலும், அவெஞ்சர்ஸ் குழுவின் ஒரே நாயகி ‘பிளாக் விடோ’வுக்கு இதுவரை படம் வெளிவராதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது.

Black Widow

இந்நிலையில்தான் ‘பிளாக் விடோ’ பற்றிய புதிய படத்தை அடுத்த ஆண்டு வெளியிட இருக்கிறார்கள். அவெஞ்சர்ஸ் படங்களில் பிளாக் விடோவாக நடித்த ஸ்கார்லர் ஜோஹன்சனே இந்த படத்திலும் நடிக்கிறார். கேட் ஷார்ட்லேண்ட் என்னும் பெண் இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் டோனி ஸ்டார்க் கதாப்பாத்திரம் சின்ன காட்சி ஒன்றில் இடம் பெற்றிருக்கிறதாம். இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :