பாஸ்போர்ட் பெறுவதற்கான புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு, கீழ்கண்ட புதிய, எளிய விதிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிறப்பு சான்றிதழ்:
பாஸ்போர்ட் வாங்குவதற்கு, 26.1.1989-க்குப் பின் பிறந்தவர்கள், பிறந்த தேதிக்கான அத்தாட்சியாக, பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என முன்னதாக விதி இருந்தது. ஆனால், இனி, பிறந்த தேதிக்கான அத்தாட்சியாக பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை.
அதற்கு பதிலாக, பிறந்த தேதி குறிப்பிட்டுள்ள பத்தாம் வகுப்பு சான்றிதழ் உள்ளிட்ட கல்வி சான்றிதழ்களையோ, பள்ளிகள் வழங்கும் மாறுதல் சான்றிதழ் (டி.சி.,) உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்கலாம்.
பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள, பான் கார்டு, ஆதார் கார்டு, வாகன ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் சமர்பிக்கலாம்.
பெற்றோர் / காப்பாளர்:
ஒற்றை பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு, ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, தாய் அல்லது தந்தை அல்லது காப்பாளர் என, யாராவது ஒருவர் பெயரை குறிப்பிட்டால் போதும்.
இணைப்புகள் குறைப்பு:
விண்ணப்பத்துடன் நிரப்ப வேண்டிய பல்வேறு இணைப்புகளின் (Annexure) எண்ணிக்கை, 15-ல் இருந்து 9-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
A, C, D, E, J மற்றும் K இணைப்புகள் நீக்கப்பட்டு, மற்ற இணைப்புகளுடன் அவைகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளை, வெள்ளைத் தாளில் சுய சான்றொப்பத்துடன் அளித்தால் போதும்.
திருமணமானவர்கள்:
திருமணமானவர்கள், திருமணப் பதிவு சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை.
விவாகரத்து பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
ஆதரவில்லா குழந்தைகள்:
ஆதரவில்லாத குழந்தைகள், பிறந்த தேதிக்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பிறந்த தேதியுடன் கூடிய அவர்கள் தங்கியிருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தின் கடிதத்தை சமர்பிக்கலாம்.
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்:
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தத்தெடுத்ததற்கான சான்று தேவையில்லை.
சாதுக்கள் / சன்னியாசிகள்:
சாதுக்கள், சன்னியாசிகளிடம் தேவையான ஆவணங்கள் இருப்பதில்லை. அதனால் பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் இருந்தது. இப்போது அதை தளர்த்தி, தங்கள் குருவிடமிருந்து கடிதம் வாங்கி விண்ணப்பித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.