திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By
Last Updated : வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (12:54 IST)

நிகரில்லா உறவு நட்பு...!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான நண்பர்கள் தினம் ஆகஸ்ட் 5ஆம் தேதி  வருகிறது. எந்தவித ரத்த பந்தமும் இல்லாமல், தன் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு பாசம் வைக்கும் நட்பிற்கு எப்போதுமே தனி மதிப்பு தான்.  நட்பிற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. வயது வித்தியாசமும் கிடையாது.
வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின்  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்பவர்களே நண்பர்கள். ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
 
பெற்றோரிடம், கணவர், மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத சில விஷயங்களை நண்பர்களிடம், தோழிகளிடம் பகிந்து கொள்ளலாம். எவ்வித  எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி உண்மையான பாசத்தை அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு உறவுகள் நிகரில்லை.
 
உறவினர்கள் இல்லாமல் இருப்பவர்களைக்கூட பார்க்க முடியும். ஆனால் நண்பர்கள் இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். பொருளாதாரம், ஏற்றத்தாழ்வு, வயது, ஆண் பெண் பேதம் என எதுவும் நட்பிற்கு கிடையாது.
 
ரஜினி, மம்முட்டி நடித்த தளபதி படத்தில் வரும் ஒரு பாடல் நட்பை விளக்கும் விதமாக அமைந்திருக்கும். அந்த வரிகளில் வரும், பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனை தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை...! என்று வரும். அதிலிருந்து நட்பின் இலக்கணத்தை உணரலாம்.
 
பெண்கள், ஆண்கள், சிறியவர், பெரியவர் என அனைவரும் தேடிவதும் நட்புதான். நம் வாழ்க்கையில் தடுமாறும்போது, தடம்மாறும் போதும் தோள் கொடுத்து  காப்பவர்கள் நமது நண்பர்களே. உறவினர்கள் ஏதாவது காரணம் கூறி ஒதுக்குவதுண்டு. ஆனால் நண்பர்கள் எந்த காரணமும் இல்லாமல் நேசிப்பார்கள். அதுதான்  நட்பு.
 
ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களின் சந்தோஷத்திலும், துக்கத்திலும் பங்கு எடுக்கவும் தனக்கு ஆறுதல் சொல்லவும் ஒரு பெண், ஆண் துணை தேவைப்படுகிறது. அவர்கள் காதலர்களாக தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நண்பர்களாவும் இருக்கலாம். உருண்டோடும் கால ஓட்டத்தில் புதிய பல நண்பர்கள் கிடைத்தாலும், பழைய ஆருயிர் நண்பர்கள் எப்பவுமே ஸ்பெஷல் தான். அப்படிப்பட்டவர்களையும், அந்த வசந்தகாலங்களையும் நெஞ்சில் அசைபோட  இந்த நண்பர்கள் தினம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க நட்பு..! வளர்க நட்பு...!