1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (09:43 IST)

ஐபிஎல் பவுலர்களுக்கு நான்கு ஓவர்களுக்கு மேல் வீசத் தெரியாது… ஷமியைப் புகழ்ந்த பெங்கால் அணிக் கேப்டன்!

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதை உறுதிப் படுத்தும் விதமாக அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பவுலிங் பயிற்சியை பெங்களூருவில் மேற்கொண்டார்.

இந்நிலையில் இப்போது அவர் ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணிக்காக மத்தியப் பிரதேச அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழித்து கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அவர் முதல் போட்டியிலேயே நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். 19 ஓவர்கள் வீசிய அவர் 54 ரன்கள விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ஷமியின் இந்த இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ள பெங்கால் அணியின் கேப்டன் விருத்திமான் சஹா “ஷமி ஒரு 6 ஓவர் ஸ்பெல்லையும், ஒரு 5 ஓவர் ஸ்பெல்லையும் வீசினார். ஒரு வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இதைதான். ஐபிஎல் பவுலர்களுக்கு நான்கு ஓவர்களுக்கு மேல் வீசத் தெரியாது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் மறு வருகை இத்தனை பலமானதாக இருந்ததை நான் பார்த்ததில்லை.” எனப் பாராட்டியுள்ளார்.