வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 4 ஜனவரி 2017 (11:06 IST)

ஜெ.வுக்காக வாதாடிய வழக்கறிஞர் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கம்!

பிசிசிஐ-யின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த, மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமனுக்குப் பதிலாக அனில் திவானையை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.


 

பிசிசிஐ நிர்வாகத்தை ஒழுங்கமைப்பதற்கு, நீதிபதி லோதா அளித்த பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூரும், செயலாளர் அஜெய் ஷிர்கே-வும் உச்சநீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தி வந்தனர்.

இதனால், திங்களன்று அவர்களை பதவி விலகுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பிசிசிஐ-க்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய, பாலி எஸ். நாரிமன், கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தது.

பிசிசிஐ சார்பில் சில வழக்குகளில் ஆஜராகி இருப்பதால், தற்போது பிசிசிஐ புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் குழுவில் தான் இடம்பெறுவது சரியாக இருக்காது என்று பாலி எஸ். நாரிமன் தெரிவித்ததன் அடிப்படையில், தற்போது அனில் திவானை உச்சநீதிமன்றம் நியமித்து இருப்பதாக கூறப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் பாலி எஸ். நாரிமன் ஆஜராகி வாதாடியதும் குறிப்பிடத்தக்கது.