கோலி, கம்பீர் மோதல் குறித்து சேவாக்கின் அட்வைஸ்!
நேற்று முன் தினம் லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர். பின்னர் கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி பிரித்து அழைத்துச் சென்றனர்.
இருவரும் வாக்குவாதத்தின் போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன்படி கோலியிடம் கம்பீர், “நீ என் அணி வீரர்களை அவதூறாக பேசியுள்ளாய். இந்த அணி என்பது என் குடும்பம் போன்றது. உன் வார்த்தைகள் என் குடும்பத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது” எனக் கூற, அதற்கு கோலி “உங்கள் குடும்பத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக், தன் கருத்து வெளிப்படுத்தியுள்ளார். அதில், “களத்தில் மோதிக் கொள்வது சரியானது அல்ல. வென்றவர்கள் கொண்டாட வேண்டும். தோற்றவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். அதைவிட்டு வார்த்தைப் போரில் ஏன் ஈடுபட வேண்டும். இருவருமே இந்தியாவின் அடையாளங்கள். அவர்களின் இதுபோன்ற செயல்கள் கோடிக்கணக்கான அவரின் பாலோயர்ஸ்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.