தென்னாப்பிரிக்கா தோற்க நீதான் காரணம்: பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
நடந்து வரும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களிலும் மண்ணை கவ்வியுள்ளது தென்னாப்பிரிக்கா. இதற்கு காரணம் தென்னாப்பிரிக்காவின் முக்கிய கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ்தான் என குற்றம் சாட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் முன்னால் டி வில்லியர்ஸ் தென்னாப்பிரிக்க அணியிலிருந்து விலகினார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்க அணியில் இருப்பவர்கள் பங்கேற்க கூடாது என்ற விதிமுறை இருந்தது. அதனால் இவர் வேண்டுமென்றே விருப்ப ஓய்வு எடுத்து கொண்டு ஐபிஎல்-இல் விளையாட போனார் என பலரும் குற்றம் சாட்டினார்கள்.
அப்போது தான் உலக கோப்பை போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்ததாகவும் அதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஒரு கல்லை தூக்கி போட்டார் டி வில்லியர்ஸ். இந்நிலையில் இந்த புகாருக்கு பதிலளித்த கிரிக்கெட் வாரியம் “அவர் ஓய்வு அறிவித்து போய்விட்டதால் அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை அணியில் சேர்த்து ஒரு வருடமாக விளையாடி வருகிறோம். திடீரென இவர் வந்து சேர்ந்து கொள்கிறேன் என சொன்னால் எப்படி சேர்த்து கொள்ள முடியும்? அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து ஒரு வருடமாக டி வில்லியர்ஸ் தென்னாப்பிரிக்காவுக்காக எந்த தொடரிலும் விளையாடவில்லை” என தெரிவித்துள்ளனர்.
தற்போது தென்னாப்பிரிக்க அணி அதள பாதாளத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது. வேகப்பந்து வீச்சுக்கு பெயர்போன தென்னாப்பிரிக்காவின் டெல் ஸ்டெயின் மற்றும் இங்கிடிக்கு ஏற்பட்டுள்ள காயங்களால் அவர்கள் ஆட்டத்தில் தொடராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டி வில்லியர்ஸை திட்டி வீடியோ வெளியிட்ட முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் “உலக கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என தென்னாப்பிரிக்கா அழுத்தம் கொடுத்தது. ஐபிஎல்-காக தனது அணியை விட்டுவந்தார் டி வில்லியர்ஸ். இப்போது தென்னாப்பிரிக்க அணியே தள்ளாட்டத்தில் இருக்கிறது. நாட்டை விட டி வில்லியர்ஸுக்கு பணம்தான் பெரிதாக போய்விட்டது.” என்று கடுமையாக சாடியுள்ளார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வைரலாக பரவி வருகிறது.