1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (17:43 IST)

ஓவருக்கு ஒரு ரன்: தென் ஆப்பிரிக்க அணி போராட்டம்

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரக்க அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. நான்காம் நாள் முடிவில் 72 ஓவருக்கு 2 விக்கெட்டை இழந்து அந்த அணி 72 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.


 
 
நான்கு விக்கெட் இழப்புக்கு 403 ரன்கள் முன்னிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 480 ரன்கள் இருந்த போது டிக்ளேர் செய்து 481 ரன்கள் என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
 
86 ரன்களுடன் இருந்த விராட் கோலி மேற்கொண்டு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அப்பாட் பந்து வீச்சில் வெளியேறினார். 52 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை தொடங்கிய ரஹானே இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார்.
 
481 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நான்காம் நாள் முடிவில் 72 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
 
இந்த போட்டியில் தோல்வியை தவிர்ப்பதற்காக தென் ஆப்பிரிக்க அணியின் ஹாசிம் அம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோர் கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த அணியின் ஸ்கோர் ஆமையை விட மெதுவான வேகத்தில் உயர்ந்து வருகிறது.
 
72 ஓவர்களை எதிர்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா 72 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. 207 பந்துகளை சந்தித்த அம்லா 23 ரன்களும், 91 பந்துகளை சந்தித்த டிவில்லியர்ஸ் 11 ரன்களும் எடுத்துள்ளனர்.
 
இந்தியா தரப்பில் 23 ஓவர்களை வீசிய அஸ்வின் 29 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் வீசிய 23 ஓவர்களில் 13 ஓவர்கள் ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் 23 ஓவர்களை வீசிய ஜடேஜ 10 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார் அதில் 16 ஓவர்கள் ரன் எதுவும் எடுக்கப்படாத ஓவர்.
 
நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில், நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. 8 விக்கெட்டுகளை வைத்துள்ள தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு மேலும் 409 ரன்கள் தேவைப்படுகிறது.
 
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 5 ஆம் நாளான நாளை அம்லா மற்றும் டிவில்லியர்ஸின் தடுப்பாட்டம் இந்திய சுழற்பந்து வீச்சளர்களின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிப்பது சந்தேகமே. இந்த போட்டியில் அம்லா, டிவில்லியர்ஸின் ஆமை வேக ஆட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களை வெளியேற்றும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிராகசமே.