மீண்டும் பந்துவீச்சு பயிற்சியை தொடங்கிய முகமது ஷமி… !
காயத்தினால் அவதிப்படும் ஷமி, கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.
அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தற்போது அவர் முழங்கால் வீக்கத்தால் அவதிப்பட்டு வருகிறாராம். இதனால் அவர் மீண்டும் அணிக்கு திரும்ப 8 முதல் 9 வாரங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. இதனால் அவர் ஆஸ்திரேலிய தொடரிலும் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது ஷமி மீண்டும் பந்துவீச்சுப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தன்னுடைய பந்துவீச்சு குறித்து பேசியுள்ள ஷமி “நான் நேற்று பந்துவீசியது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். முதலில் என்னுடைய வழக்கமான ரன் அப்பில் இருந்து பாதி தூரத்தில் இருந்தே பந்துவீசினேன். ஆனால் நேற்று முழுவதுமான ரன் அப்பில் பந்துவீசினேன். இப்போது 100 சதவீதம் வலியில்லாமல் பந்துவீசுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.