ஐபிஎல் தொடர்: டெல்லி அணிக்கு திரும்பினார் முகமது ஷமி
மனைவி பிரச்சனையில் இருந்து விடுப்பட்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் முகமது ஷமி.
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடக்கவுள்ளது. இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார் முகமது ஷமி.
அண்மையில் இவரது மனைவி ஹஸின் ஜஹான், தனது கணவர் கொடூரமானவர். அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்கள் என கொல்கத்தா காவல்துறைக்கு புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இதனால் பிசிசிஐ அவரின் பெயரை ஒப்பந்த பட்டியலில் சேர்க்கவில்லை.
பின்னர் அவர் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. இதனால் பிசிசிஐ இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் அவரை பி கிரேடில் சேர்த்தது. இதற்கிடையே டேராடூனில் இருந்து டெல்லி சென்ற ஷமியின் கார் விபத்துக்குள்ளாகி அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.