1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2016 (14:31 IST)

மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்குமா? நடக்காதா? - பிசிசிஐ திணறல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அறிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
 

 
இந்தப் பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அடங்கிய 159 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும், அந்த பரிந்துரைகளுக்கு அனைத்தையும் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
 
இதில் பல பரிந்துரைகளை கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
 
இதற்கிடையில், கிரிக்கெட் வாரியத்தின் வங்கி கணக்குகளை பாங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் எஸ் பாங்க் ஆகிய இரண்டு வங்கிகள் நிர்வகித்து வரு கின்றன. லோதா கமிட்டி, இந்திய கிரிக்கெட் வாரியம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு கடிதம் அனுப்பி இருந்தது.
 
லோதா கமிட்டியின் கடிதத்தை ஏற்று பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வங்கி கணக்கை முடக்கி உள்ளது. வங்கி கணக்கை முடக்குவது பற்றி எஸ் வங்கி ஆலோசித்து வருகிறது.
 
தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது.
 
இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர், “பிசிசிஐ-யின் வங்கி கணக்கை முடக்கிவது என முடிவெடுத்தால், இந்தியா-நியூசிலாந்து தொடரை நடத்துவதற்கான எந்த முகாந்திரமும் எங்களுக்கு இல்லை. நாங்கள், உலகத்திற்கு முன்பாக இந்தியா அவமானப்பட நேரிடுவதை விரும்பவில்லை.
 
ஆனால், நாங்கள் எவ்வாறு செயல்பட முடியும்? எவ்வாறு போட்டிகளை நடத்த முடியும்? யார் பணம் செலுத்துவது? வங்கிக் கணக்கை முடக்குவது என்பது நகைச்சுவையான விஷயம் அல்ல. ஒரு சர்வதேச அணியை கூரான முனைக்கு எதிராக நிறுத்துவது போன்றது” என்று தெரிவித்துள்ளார்.
 
இதனால், மீதமுள்ள ஒரு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.