செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (21:52 IST)

யுஏஇ அணிக்கு எதிரான போட்டி..! 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் வெற்றி..!!

Indian Womens Team
மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 
 
மகளிர் ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், யுஏஇ அணிகளும், பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி யுஏஇ அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற யுஏஇ பந்து வீச்சை தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன்பிரித் கவுர் 66 ரன்களும், ரிச்சா கோஷ் 64 ரன்களும் எடுத்தனர்.

 
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.