பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு தீரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.
இந்த தொடரில் ஆரம்பம் முதலே சொதப்பி வந்த கோலி, இறுதி போட்டியில் நிதானமான ஒரு இன்னிங்ஸை கட்டமைத்து இந்திய அணியின் வெற்றியின் முக்கியக் காரணமாக அமைந்தார். அவர் 59 பந்துகள் சந்தித்து 76 ரன்கள் சேர்த்தார். ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய அவர் தொடர்ந்து மூன்று விக்கெட்கள் இழந்ததும் நிதானத்தைக் கையில் எடுத்தார். பின்னர் இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடி அவுட் ஆனார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி உடனான உரையாடலின் போது பேசிய கோலி “இந்த தொடரில் நான் நினைத்த அளவுக்கு என்னால் பங்களிக்க முடியவில்லை என பயிற்சியாளர் டிராவிட்டிடம் கூறினேன். அதற்கு அவர் உனக்காக சரியான தருணம் வரும் என்று நம்பிக்கையூட்டினார். இறுதிப் போட்டியில் கூட என்னால் சிறப்பாக விளையாடமுடியும் என்ற நம்பிக்கை இல்லை என ரோஹித்திடம் கூறினேன். ஆனால் அன்று நான் சந்தித்த முதல் நான்கு பந்துகளிலேயே மூன்று பவுண்டரிகளை விளாசினேன். அப்போது ரோஹித்திடம் சென்று என்ன போட்டி இது? ஒரு சில நாட்களுக்கு முன்னால் என்னால் ரன்களே அடிக்க முடியவில்லை. ஆனால் இன்று எல்லாமே நல்லதாக நடக்கிறது எனக் கூறினேன்” எனப் பகிர்ந்துள்ளார்.