1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (07:38 IST)

மீண்டும் மோதிக்கொண்ட கம்பீர் & கோலி… பரபரப்பான மைதானம்- என்ன நடந்தது?

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். அதிலும் இவர் தோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுற்றியிருந்த வீரர்கள் அவர்களை விலக்கி சமாதானப்படுத்தினர்.

லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலியும், கம்பீரும் 2014 ஆம் ஆண்டு இதே போல ஐபிஎல் தொடரில் மோதிக் கொண்ட சம்பவம் ஐபிஎல் வரலாற்றின் கருப்புப் புள்ளிகளில் ஒன்றாக இன்றளவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.