செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (11:55 IST)

கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கபில் தேவ்..

இந்திய அணியின் கிரிக்கெட் பயிற்சியாளரை சமீபத்தில் நியமித்த கபில் தேவ், தான் பதவி ஏற்றிருந்த கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய அணியின் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் தலைவராக இருந்தார். இந்நிலையில் இரட்டை ஆதாய பதவிகளில் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இதற்கு பதிலளிக்குமாறு கிரிக்கெட் வாரியத்தின்  நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின் கபில் தேவ்விற்கு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் அந்த கமிட்டியை சேர்ந்த அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோருக்கும் இப்புகாரின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சாந்தா ரங்கசாமி, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மற்றும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் இயக்குனர் ஆகிய பதவி இரண்டையும் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டிக்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து மூன்று பேர் கொண்ட தற்காலிக ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவியை கபில் தேவ் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் அதற்கான கடிதத்தையும் அனுப்பியுள்ளார். கபில் தேவ், பிசிசிஐ வாரிய உறுப்பினராகவும், மைதான மின்விளக்குப் பிரிவு தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் கபில் தேவ், அனுஷ்மான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கமிட்டிதான் ரவி சாஸ்திரியை மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் ரவி சாஸ்திரியின் நிலை தற்போது என்ன? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் கபில் தேவ்வுடன் அன்ஷுமன் கெய்க்வாட்டும் ராஜினாமா செய்துள்ளது கூடுதல் தகவல்.